புதியவை

சனி, 30 ஜூன், 2012

 விறகு சுமப்பவளே....



பொடி சுள்ளிகளையும்!
விறகு கட்டுகளையும்-
சுமப்பவளே!

உன் "சுமையை"-
மாத்திடதான்-
ஒரு நாதியும் இல்ல!

உச்சந்தலையை-
அழுத்தாம இருக்க-
"சும்மாடு"- துண்டு-
தலைக்கு!

உன் மன அழுத்தத்தை-
குறைக்க ஏதும்-
வழி இருக்கு!?

"மணந்தவனோ"-
மானங்கெட்ட மது-
மயக்கத்திலே!

மனசே இல்லாதவங்க-
டாஸ் மாக்கை திறக்குறவங்க-
ஆட்சியிலே!

நீ!
விறகு பொறக்குறது-
அடுப்பு எரிய!

மின்சாரமே கனவு-
போல வருமா?-தெரியல
விளக்கு எரிய!

இல்லை மின்சாரம்-
மின் பொருட்கள்-
இலவசம்!

உறங்க முடியாது-
உண்ணாம -
உணவு பொருளை-
வாங்குனால் !-
போகணும் பரதேசம்!

வேகமா விறகுகளை-
கட்டி விடு!

அதிகாரி கண்ணில்-
படாமல்-
சென்று விடு!

வனத்துறை அதிகாரி-
பார்ப்பாரேயானால்-
உனது ஆயுதத்தை-
பறிமுதல் செய்து-
விடுவார்!

"பேரழிவு"ஆயுதம் என-
வழக்கும் போட்டிடுவார்!

"மொட்டை" அருவா-
ஒரே சொத்து-
உனக்கு!

அதிகாரிக்கோ-
பதிந்து விட்டதில் சந்தோசம்-
ஒரு வழக்கு!


ஒருவன் ஹீரோ ஆக-
ஒருவனை வில்லன் வேஷம்-
போடுவது போல!

அதிகாரிகள்-
மெடல்கள் வாங்க-
அப்பாவிகளை சுட்டு விட்டு-
தீவிர வாதி என-
சொல்வது போல!

ஏழை தாயே-
உன் "நிலை" மாறும்-
ஒரு நாள்-உன்
மகனால்!

நம் தாய்நாட்டிலும்-
போலி வேசதாரிகள்-
முகதிரை கிழியும்-
ஒரு நாள் வரும்-
வளரும்தலைமுறையால்!!!

ப்ரியமுடன்-
சீனி ஷா.

வெள்ளி, 29 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ்-10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஜூமஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்து விட்டு (முதலில்) பள்ளிக்கு வந்தால், ஓர் ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்             நூல்: புகாரி

வியாழன், 28 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ்-9

அல்லாஹ்வின் தூதர் (ஸ்ல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு, க்ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரிவிட்டு, வேறு பக்கத்தில் திரும்பிப்படுத்துக்கொள்ளட்டும்            அறிவிப்பவர்:ஜாபிர் (ரலி)                   நூல்; முஸ்லிம் 4554

வாலிபாலும்- நம் வாலிபர்களும்...! 



இருக்கும்-
குப்பைகாடுகளாக!

மாறும்-
விளையாட்டு திடல்களாக!

மறக்க முடியுமா!?

விரவி கிடந்த-
மலத்தையும்!
சிதறி கிடந்த-
பாட்டில் சில்களையும்!

சுத்தம்-
செய்த கைகளையும்!
மண்ணின் மேல்-
நேசம் கொண்ட-
எம்மக்களையும்!

விரைந்து ஓடும்-
"பட்டணக்காரர்களே"!

உங்களை விட-
ஒரு படி மேல-
கிராமத்தவர்களே!

"வாழ்வதற்காக"-
படிப்பது-
பட்டணம்!

வாழ்விலேயே பாடம்-
படிப்பதுதான்-
கிராமம்!

நீண்ட நாள்-
ஆசை ஒன்னு!

உள்ளூரில் கை பந்து-
போட்டி நடத்தனும்னு!

திட்டங்கள்-
தீட்டப்பட்டது!

நிதிகள்-
திரட்டப்பட்டது!

துண்டு பிரசுரங்கள்-
அச்சிட பட்டது!

சுற்றுவட்டாரங்களில்-
விநியோகிக்கப்பட்டது!

போட்டி நாளும்-
வந்து விட்டது!

"கடைசி" பேருந்தும்-
வந்து விட்டது!

அணிகள்-
வகுக்கப்பட்டது!

களத்தில்-
இறக்கப்பட்டது!

சூடாக இருந்தது-
தேநீரும்!
புரோட்டாவும்!
விளையாட்டு-
தளமும்!

ஆதாரங்களை பார்க்காமல்-
"நம்பிக்கை" அடிப்படையில்-
தீர்ப்பு சொல்லும்-
நீதி மன்றங்களை போல!

ஒரு அணி வெற்றி பெற-
மறு அணி தோல்வியுற-
சரிந்தது- அடிக்கி வைத்த
அட்டை பெட்டிகள் போல!

கூடி கொண்டிருந்தது-
முட்டல்களும்!
முறைப்புகளும்!

நேரம்-
கரைந்து கொண்டிருந்தது!


அணிகள்-
குறைந்து கொண்டிருந்தது!

எதிர்பார்த்த படியே-
நடக்க இருந்தது!

"எதிர்பார்க்க"கூடாதது-
"நடந்திடுமோ"-
பதற்றமாக இருந்தது!

முதல் பரிசுக்கு-
மோத இருந்தது-
உள்ளூர் அணியும்!

அடிக்கடி "உரசி" கொள்ளும்-
வெளியூர் அணியும்!

ஜெயித்தது-
இரு அணிகளும்-
ஆளுக்கொரு "கரைகள்"!

ஆடுபவர்களிடையே-
சிராய்ப்புகளால்-
ரத்த கறைகள்!

கடைசி பந்து-
வெற்றி நிர்ணயிக்கும்-
பந்து!

வந்தது-
எதிரணி இடம்-
இருந்து!

வந்ததை -
லாவகமாக-
எடுத்து கொடுத்தான்!

திரும்பவே கூடாதென-
இடியென அடித்தான்-
ஒருவன்!

எதிரணி கையில்பட்டு-
பின்புறம் சென்றது-
பந்து!

"வெற்றியை " -
திருப்புவதற்காக-
ஒருவன் ஓடி கொண்டிருந்தது!

ஒரு சிந்தனை துளியை-
தந்தது!

வெல்கிறோமோ !?-
வீழ்கிறோமோ!?-
அதுவல்ல -வாழ்வில் முக்கியம்!

வாழும் வரை-
போராடனும்-
என்பதே-முக்கியம்!

ப்ரியமுடன்-
சீனி ஷா .

அர்ப்பணம்-முன்னாள் அணியினர்கள்!
மருதநாயகம் அணியினர்!
தீன் தென்றல் அணியினர்!
பத்ருல் இஸ்லாம் அணியினர்!

இந்நாள் அணி!
ஜாலி பாய்ஸ் அணியினர்!

இவர்கள் அனைவருக்கும்!

(;குறிப்பு- வேறு அணியின் பெயர்கள் விடுபட்டிருந்தால் தெரியபடுத்தவும்-
அதனையும் சேர்த்துகொள்ளப்படும்)





புதன், 27 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ்-8

அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூரினார்கள்: ஒருவர் தொழுகைக்கு செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்                     அறிவிப்பவர்:  அபூஹீரைரா (ரலி)                நூல் ; புஹாரி: 2989

கர்ப்பவதி!



மாத தேதி-
"தள்ளி "போனால்-
மங்கை அவள்-
மகிழ்வும்-
மயக்கமும் -
அடைவாள்!

பரிசோதனைக்காக -
அழைத்து-
செல்லபடுவாள்!

மழலை மலரும்வரை-
மருத்துவமனையே-
மறு வீடாகும்!

மருத்துவர்கள்-
ஆலோசனையோ-
கொஞ்சம்!

சுற்றத்தார்-
யோசனைகளோ-
அதனையே மிஞ்சும்!

மலரிலும்-
மெல்லியது-
பெண்மை!

மெல்லியதிலும்
மென்மை-
தாய்மை!

தாயை மறந்தவன்-
தரம் கெட்டவன்-
என்பதே-
பேருண்மை!

கர்ப்பிணியை கண்டால்-
கல் நெஞ்சிலும்-
ஈரம் வருமடா!

கர்ப்பிணி வயிற்றை
கிழித்து -
சிசுவை கொளுத்தியது-
ஏனடா!?

மத வெறியன்-
அடுத்த பிரதம-
வேட்பாளராம்!!

ஆனாலும்-
இது- மத சார்பற்ற-
நாடாம்!!

நாட்கள் ஓட-
ஓட!

உயிரணு ஆரம்பிக்கும்-
உருவமாக -
மாற!

துடிக்கும்-
குழந்தை-
வயிற்றினுள்ளே!

இனிமை தரும்-
தாய்மை அடைந்தவளின்-
மனதினிலே!

கேலி பேசுவார்கள்!

பத்து மாதத்தில்-
பெண்ணின் "சுமை"-
குறைந்திடும்!

ஆணுடைய தொந்தி-
வயிறு எப்போது-
மாறிடும்!!?

பெண் வயிறு-
உயிரின் உறைவிடம்!

ஆண் வயிறு-
கொழுப்பின் இருப்பிடம்!

இதுவே-
என் வாதம்!

ஆண்களுக்கோ-
"ஆம்பிள்ளை " என-
நிருபித்து விட்டதாக-
நினைப்பு!

தாய்மை அடைந்தவளுக்கோ-
ஏறி இறங்கும்-
நாடி துடிப்பு!

சொந்தங்களில்-
சூடு பிடிக்கும்-
விவாதம்-
ஆண் பிள்ளையா!?
பெண் பிள்ளையா!?

எக்குழந்தை. -
ஆனாலும்-
அக்குழந்தை நம்-
வம்சங்களின்-
கிளை இல்லையா....!?

ப்ரியமுடன்-
சீனி ஷா.



செவ்வாய், 26 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ்-7


அல்லாஹ்வின் தூதர் (ஸ்ல்) அவர்கள் கூறினார்கள்:  வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்) என் கையில்தான் இரவும் பகலும் உள்ளன            

அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி)               நூல்:முஸ்லிம் 4519

திங்கள், 25 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ்-6


நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
சொர்க்த்தில் நுழையும் எவரும் உலகிலுள்ளபொருட்களையெல்லாம் அவருக்கு கிடைப்பதாகஇருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்
           அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
                         நூல்:   புஹாரி 2817




சூலியா பள்ளியும்- நம் மக்களும்...

சூலியா பள்ளி- சிங்கை

அல்லாஹ் அக்பர்!
அல்லாஹ் அக்பர்!
பாங்கின் சப்தம்!

உலகினை தவறாமல்-
எழுப்பும்!

பர பரப்பான-
பாருலகம் இது!

பக்குவபட்டிட-
அழைக்கும்-
பாங்கான பாங்கு-
இது!

ஆளுபவனும்-
ஆளபடுபவனும்-
வேறுபாடு இங்கில்லே!

நின்றிட வேண்டுமே-
ஒரே வரிசையிலே!

இதே சட்டம்தானே-
அனைத்து பள்ளிகளிலே!

"அடிமை" பிலாலாக-
இருந்தாரே!

பிலால்(ரலி) யாக-
ஆனாரே!

கலிமா சொன்ன -
மாத்திரத்திலே!

ஒழிந்தது இங்கே-
"அடிமை" என்ற சொல்லே!

இலவச காலனி-
கொடுக்கும் -
அரசுகளே!

தாழ்த்தப்பட்ட-
மக்களை -
உயர்சாதி-
தடுக்குதே!

தொப்புள் கோடி-
அறுப்பு -முழு குழந்தையை
வெளியேற்றவே!

தாய் -பிள்ளை-
உறவை துண்டிக்க-
இல்லையே!

நாம் பிறந்த -
ஊரான பள்ளியை-
விட்டு!

வாழ்கிறோம்-
பொழைக்க போன-
இடத்தில பள்ளியை-
தொடர்பு கொண்டு!

அதுபோலவே-
சிங்கையில் நம்-
முன்னோர்களும்!
இளையர்களும்!

சூலியா பள்ளியே-
நம்மை இணைக்கும்-
பாலம்!

இப்பள்ளி சிங்கையில்-
நினைவு சின்னமாகும்!

பட்டாம் பூச்சிகளின்-
கூடாரம்!

பறவைகளின்-
சரணாலயம்!

பெருநாட்களில்-
ஊரில் இருப்பதாகவே-
நினைப்பும் வரும்!

நோன்புகால -
திராவியாக்களுக்கும்-
இஹ்திகாப் இருக்கவும்-
நம் மக்கள் அதிகம்-
இருக்கும் இடம்!

யா அல்லாஹ்!

உன் வீடுகளாகும்-
பள்ளிகளெல்லாம்!

உனது அருளில்-
புகுதிடுவாயாக-
எங்களை எல்லாம்!

ப்ரியமுடன்-
சீனி ஷா.

ஞாயிறு, 24 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ்-5



தாய் தந்தையருக்கு நன்மை செய்வது,     நற்செயல்களில் சிறந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்             


 அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)                     நூல் :புஹாரி:2782


மேலும் விளக்கத்திற்கு ''க்ளிக்''குங்கள்

சனி, 23 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ்-4



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூவர் இருகும்போது ஒருவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்
             

 அறிவிப்பவர்; இப்னு உமர் (ரலி)                  நூல்;  முஸ்லிம் 4399

வெள்ளி, 22 ஜூன், 2012

தினமும் ஒரு ஹதீஸ்-3


ஜூம்ஆக்காக குளித்து தூய்மையாகி எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி (பள்ளிக்கு) புறப்பட்டு (அமர்ந்திருக்கு)இருவரை பிரிக்காமல் அவருக்கு விதித்ததை தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால், அந்த ஜூம்ஆவுக்கும் அடுத்த ஜூம்ஆவுக்கும் இடைப்பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்                            நூல்:புகாரி:910

மீனவன்!



இரும்பே -
இத்து போகும்-
துருபிடித்து!

அத்தனை வலிமை -
கொண்டது-
கடல் காத்து!

வாட்டும் குளிரில்-
வாடியதுண்டா!?

கொல்லும் வெயிலில்-
செத்ததுண்டா!?

இதனை அனுபவிக்க-
மீனவனா வாழ-
உங்களுக்கு தைரியம்-
உண்டா!?

கடலை விட்டு-
வெளியே வந்து-
காய்ந்தால்தான் -
கருவாடாகும் -
மீன்கள்!

கடலுக்கு மேலேயே-
காய்ந்து கருவாடாகுபவர்கள்-
மீனவர்கள்!

அலைகளில் -
அசைந்தாடும்-
படகுகள்!

கடல் நீரில்-
மிதக்கும்-
"போயாக்கள்"!

நீருக்குள்-
விரித்து இருக்கும்-
வலைகள்!

பார்த்ததுண்டா!,?-
கரை ஒதுங்கையில்-
"மடி"அறுந்து-
என் மீனவர்கள் படும்-
அவதியை!

ஆனாலும் -
மறந்தும் -
காட்டி கொள்ளமாட்டார்கள்-
கண்ணீரை!

கரை சேராதவர்கள்-
எத்தனை பேர்!?

"கரை" ஏறாத -
குமருகள் எத்தனை-
பேர்!?

தாய் மடி-
எல்லோருக்கும்-
கிடைக்கும்-
அரியணை!

அரிதாகிவிட்டதே-
கண்டிட-
அரியணையை -
அரவணைக்கும் -
மகன் -மகளை!

முள்ளில்லாத மீனை-
தின்ன ஆசைபடுகிறோம்!

முதுகு எழும்பு-
ஒடிய கரை வலை-
இழுக்கும் -மக்களின்
வலியை-எத்தனை பேர்
உணர்ந்தோம்!?

மீனவனின்-
வேதனையை -
வார்த்தையில்-
வடித்திட முடியாது!

சொற்களிலும்-
சுருக்கிட முடியாது!

(நம் முன்னோர்களான மீனவ மக்களுக்கும்-
நம் சகோதரர்களான வாலிநோக்க மக்களுக்கும் மற்றும் மீனவ மக்களுக்கு
இக்கவிதை அர்ப்பணம்)


ப்ரியமுடன்-
சீனி ஷா.



வியாழன், 21 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ் 2


பாதையில் மனிதர்களுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மரக் கிளையை அகற்றிய மனிதனை சுவர்க்க இன்பங்களை அனுபவிக்க கண்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்                               அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)   நூல் : முஸ்லிம் 5107

புதன், 20 ஜூன், 2012

வீடு!



பறவைக்கு -
ஒரு கூடு!

விலங்குக்கு-
ஒரு காடு!

மனிதனுக்கு-
ஒரு வீடு!

அழியும்-
பட்டியலில்!

பறவைகள்!
விலங்குகள்!
மனிதர்கள்!

வேடிக்கை பார்க்குது-
பாதுகாக்க வேண்டிய-
நாடு!

இதை மறைத்துவிட்டு-
பொருளாதார வளர்ச்சின்னு-
பேசுவது-
வெட்ககேடு!
-----------------------------
மனைகள்-
இருந்தது-
மகிழ்ச்சியின் -
தொழிற்சாலையாக!

இப்போது-
அடித்துகொள்கிறார்கள்-
"அலை வரிசை"-
மாற்றுவதற்காக!

தொடர்களில் -
அழுவுபவார்கள்!-
காசை வாங்கி கொண்டு!

வீட்டுல உள்ளவங்க-
அழுவுறாங்க-
கேபிள் பணம்-
கட்டி கொண்டு!

போடுற நிகழ்ச்சியெல்லாம்-
கோடீஸ்வர நிகழ்ச்சி!

மக்களின் -
வாழ்வாதாரமோ-
அவலகாட்சி!
------------------------------
நேற்றைய அறிமுகங்கள்-
விருந்தினர் என்ற பேரில்-
நடு வீட்டிலே!

நாம் உலகிற்கு-
வர வழியானவள்-
செல்லமாய் வளர்த்தவள்-
செல்ல பிராணிக்கு-
அருகிலே!
--------------------------
கோடிகளை கொட்டி-
கட்டிய வீடானாலும்-
என்ன செய்ய முடியும்!

மழலையின் மொழி-
கேட்கவில்லை என்றால்-
பிச்சை பாத்திரம்-
ஆகி விடும்!
-------------------------
எத்தனை வேலையாட்கள்-
கவனித்தாலும்-
குழந்தைக்கு போதாது!

ஒரு தாயின் அன்புக்கு-
ஈடாகாது!



ப்ரியமுடன்-
சீனி ஷா.

தினமும் ஒரு ஹதீஸ்-1


(அல்லாஹ்வின்)அடியானுக்கும் இனை வைப்பு, இறைமறுப்பு இவற்றுக்கிடையில் (உள்ள வித்தியாசமாக) தொழுகை விடுவது உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்                      


அறிவிப்பவர்:ஜாபிர் (ரலி)                         
 நூல் :முஸ்லிம் 134

பரிசு போட்டி: நீங்கள் தயாரா?




அன்பு நெஞ்சங்களே!
இனி அடிக்கடி இந்த தளத்தில் பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்படும் (பரிசு இல்லையா? என்று கேக்கப்படாது) பரிசும்தான் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ். 


இப்ப..
முதல் போட்டி அறிவிப்பு.!


கேள்வி இதுதான்:
உலகில் கருவிலிருந்து பிறக்காத உயிரினம் எத்தனை? அவை யாவை?


பதில்களை கருத்துரையில் (comment) தெரிவியுங்கள். தகுந்த பதில்களிக்கு தக்க பரிசுகள் உண்டு.


பரிசு என்னவா இருக்கும்? 
அதையும் காட்டிவிடுகிறேனே..
இதோ...
முதல் பரிசு இந்த விலை மதிப்பில்லாத கார்
இரண்டாவது பரிசு பல்சர் பைக்
மூன்றாவது பரிசு நம்ம அண்ணாமலை சைக்கிள்
ஏதோ.. எங்க தகுதிக்கு இதாங்க கொடுக்கமுடியும்
இப்ப நம்ம கம்பெனி ரொம்ப நஷ்டத்துல ஓடிட்டு இருக்கு அதனால இப்போதைக்கு இதுதான் தரமுடியும். எடுத்துக்குங்க. எங்க போய் எடுக்கிறது? அட அதாங்க. நம்ம கூகிள்- ல image search பண்ணி எடுத்துக்குங்க .

வெள்ளை "அசரத்!


கொட்டு மேளங்கள்!
குதிரை ஊர்வலங்கள்!

கரகாட்டம்!
சண்டை போடும்-
கிரக ஆட்டம்!

விடிய விடிய-
திரைப்படங்கள்!
முடியாத-
ஆடல் பாடல்கள்!

வலைக்குள் செல்லும்-
மீனுக்கு தெரியாது-
மாட்டிடுவோம்-
என்று!

பொறிக்குள் செல்லும்-
எலிக்கு தெரியாது-
"திரும்ப " மாட்டோம்-
என்று!

பழக்கப்பட்ட-
அனாச்சாரங்கள் தெரியவில்லை-
தவறென்று !

தொடர்ந்தது-
இதே நிலை!

நியமித்தார்கள்-
இமாமாக-
புதிய நபரை!

அப்துல் மாலிக் ஆலிம்-
அவர்களை!

அவர் செய்ய துணிந்த-
காரியம் லேசாகபட்டது இல்ல!

வாழை பழத்தில்-
ஊசி சொருகுவது-
போலல்ல!

கோடாரியை வீசினார்-
கற்பாறை எனும்-
அனாச்சாரங்கள் மேல!

தவறுகளை-
சுட்டிக்காட்டினார்!

நெருப்பு சுட்டவுடன்-
கையை எடுப்பது போல்-
ஒதுங்கினார்கள்-
ஊரார்!

அன்று முதல்-
இன்று வரை!

அந்த அனாச்சாரங்கள்-
நடந்தேறவே இல்லை!

ஒரு வீடு பற்றிகொள்வதால்-
பக்கத்துக்கு வீட்டில்-
தீ படரா விட்டாலும்-
புகை படாமல்-
இருப்பதில்லை!

துணி மூட்டைக்குள்-
கட்டி வைத்தாலும்-
மல்லிகை -
வாசம் வீச-
மறுப்பதில்லை!

மாற்றங்களையும்-
யாரும் தடுக்கவும்-
முடிவதில்லை!

யா அல்லாஹ்!
அசரத் அவர்களின்-
நற்கருமங்களை ஏற்றுகொல்வாயாக!

எங்களையும் தவறுகளில்-
விழாமல் பாதுகாப்பாயாக!

எங்கள் அனைவரையும்-
நரக நெருப்பில் இருந்து-
காப்பாயாக!

சொர்க்க சோலையில்-
சேர்திடுவாயாக!

எங்கள் இறைவா!

உன்னையே நாங்கள்-
வணங்குகிறோம்!

உன்னிடமே -
உதவியை நாடுகிறோம்!


ப்ரியமுடன்-
சீனி ஷா.

செவ்வாய், 19 ஜூன், 2012

சற்று சிந்திப்போம் (சுவைக்க ஒரு சூடான பகுதி)

வாழ்கை என்ற பயணத்தில் ஒரு முக்கியமான திருப்பு முனைதாங்க மணவாழ்கை. இதை நாம் சரியான பாதையில் அமைத்துக் கொண்டால் நம் வாழ்கைப் பயணம் மிகவும் அமைதியாகவும் தடுமாற்றம் இல்லாமலும் அமையும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதாவது மனைவி/கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு மனிதனின் வாழ்கையின் சந்தோசத்தை தீர்மானிக்கின்ற சக்தி இந்தக் கல்யாணம். அப்படிப்பட்ட கல்யாணத்தில் இடம் பெரும் சமூகச் சீரழிவான சீதனம் பற்றிய பார்வைதான் எனது இவ்வெழுத்துக்களின் நோக்கம். வாங்க நுழையலாம். இந்த சீதனம் இன்று பல ஏழைகளின் கண்ணீருக்கும், பலரின் வாழ்கை பிரச்சினைக்கும், கணவன் மனைவியின் அமைதியின்மைக்கும் காரணங்களாய் திகழ்கிறது. இன்றய நம் சமூகத்தில் இச் சீதனம் பாரிய ஒரு சமூக நோயாகக் கருதப்பட்டு இதை தடுக்க பல வழிகளில் முயற்சி செய்தும் இதன் வளர்ச்சி மட்டும் மறையவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு காரணம் இதை எதிர்பவர்களும் கூட சில வேளை அதற்குள் உள் வாங்கப்படுவதுதான். அதாவது இச் சீதனம் இன்று பழ வழிகளில் மனிதனை சீர் கெடுத்துக் கொண்டிருக்கிறது அப்படின்னு தான் சொல்லனும். அந்த வழிமுறைகளை சற்று விரிவாக விளக்குவது என் கடமை கூட. அவற்றை இங்கு 2 முறையாகப் பிரிக்கலாம். 1. வெளிப்படையாக. 2. மறைமுகமாக. 1.வெளிப்படையாக நேரடியாக பெண் வீட்டாரால் பணம் நகை வீடு வாகனம் போன்றவைகள் கொடுக்கப்படுவது.(மணமக்கள் அறிந்து) இதிலும் இரண்டு வகை உண்டு 1. ஆண் வீட்டாரின் வற்புறுத்தலில் பெருவது 2. பெண் வீட்டாரால் தாமாக விரும்பிக் கொடுப்பது. இதில் முதல் வகையில் நேரடியாகவே பிரச்சினை தோற்றமெடுக்கும். ஆண் வீட்டார் பெண் வீட்டாரிடம் கேட்கும் தருணமே பெண் வீட்டாருடைய மனதில் ஆண் வீட்டார் பற்றிய தப்பெண்ணம் உருவாக ஆரம்பிக்கிறது. பெண் வீட்டாரால் அது வெளியில் சந்தோசமாக கொடுக்கப்பட்டாலும் இவர்களின் உள் மனதில் இவை சம்மந்தமாக மறைமுக கருத்துக்கள் தோற்றமெடுக்கிறது என்பது தான் யதார்த்தம். எனவே ஆரம்பத்திலயே மனதில் தப்பெண்ணம் தோன்றும் போது அவை போகப் போக பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்து இரண்டு குடும்பங்களுக்கும் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இரண்டாவது வகையில் பெண் வீட்டாரின் விருப்பத்தில் இது வழங்கப்படால் இங்கு எழும் பிரச்சினை மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது பெண் வீட்டாருக்கு நாங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறோம் என்ற ஒரு வித பெருமை தொற்றிக் கொள்ளும். இதனால் அவர்களின் செயல்கள் சற்று வித்தியாசமான நடத்தையை பிரதிபலிப்பதோடு மணமகனின் தன்மானத்துக்கும் மட்டுமல்லாமல் அவனின் குடும்பத்துக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல் ஆண் வீட்டாருக்கு அவர்களைப் பற்றிய சற்று தாழ்வுப் பிரச்சினை ஏற்பட காரணமாயிருக்கும். எனவே இதுவும் திருமணத்தை நிறுத்திவிடவோ அல்லது திருமணத்தின் பின் வாழமுடியாமல் தடுக்கவோ காரணமாயிருக்கும். இவற்றை தடுக்க அந்த ஆண் மகனால் மட்டுமே முடியும். 2.மறைமுகமாக மறைமுகமாக எனும் போது மணமக்கள் அறியாமல் இரு குடும்ப பெரியவர்கள் மட்டும் பேசி கொடுப்பது எடுப்பது. இது மிகப் பெரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். மேலே சொல்லப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் இதனுல் அடங்கினாலும் இந்த விடயங்கள் வெளியில் வரும் போது ஏற்படும் பாதிப்பு அந்தக் குடும்பங்களின் மீது சமூகம் தொடுக்கும் பார்வைகள் என்பன இன்னும் அதிகம் ஆதிக்கம் செலுத்தும். பெரியவர்கள் விட்ட தவறுக்காக இங்கு பாதிக்கப்படுவது இரண்டு அன்பான கணவன் மனைவியின் வாழ்கை என்பது இங்கு சுட்டிக்காட்டப் பட வேண்டும். எனவே இந்த விடயங்களில் அனைவரும் கவனமாய் இருக்கவேண்டும் என்பதுடன் கணவன் அல்லது மனைவி இச் சந்தர்பத்தில் சற்று ஆறுதலாய் யோசித்து முடிவெடுக்க வேண்டும். எனவே இப்படியான பல வழிகள் இருந்தும் வெளிப்படை மறைமுகம் என்ற வரையறைக்குள் முடித்திருக்கிறேன் சுருக்கத்துக்காக. இங்கு ஒரு விடயத்தை அவதானித்திருப்பீர்கள். நாம் நம் இலேசுக்காக வெளிப்படை மறைமுகம் என்று பிரித்தாலும் எழும் பிரச்சினைகள் எல்லாம் ஒன்றுதான். அடுத்து நாம் நோக்க வேண்டியது இந்த சீதனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொருப்பு கூற வேண்டியது யார். என்னைப் பொருத்தவரை 80% ஆண்கள் (மன்னிச்சுடுங்கப்பா ஆண்களே). ஆமாங்க இதற்கு பொருப்பெடுக்க வேண்டியவர்கள் ஆண்கள் தான் குறிப்பாக அந்த மணமகன் தான்.(வெளிப்படையான சீதனத்தில் மட்டும்) இந்த விடயத்தில் ஒரு மிகப் பெரும் தவறான கூற்று ஒன்று நிலவி வருகின்றது. அதை தகர்க்க வேண்டியது என் கடமை கூட. அதாவது சீதனம் கேட்கப்படுவது அந்த ஆண்மகனின் தாயின் மூலமாக என்று சில கருத்துக்களும் முன் வைக்கப்படுகிறது. வாங்கப்டும் மொத்த சீதனத்துக்கும் தன் தாய் மேல் பழி போடும் மகன்களை நினைத்து வெட்கப்படத்தான் முடிகிறது. சரிங்க நம்ம அவங்க விவாதத்துக்கே வரலாம். உன் தாய்தான் சீதனம் கேட்கிறாங்க என்று வைத்துக் கொள்ளுவோம். நீ என்ன ஊமையா? எங்கே போனது உன் வாய்ப் பேச்சுக்கள். தன் தாயிடம் அழகான முறையில் சொல்லி இது தவறு என்று புரியவைக்க கூட உன்னால் முடியவில்லை என்றால் நீ ஆண் மகன் என்று மார்தட்டிக் கொள்ளும் உரிமை உனக்கில்லை. உன் உள் மனதில் ஆசையை வைத்துக் கொண்டு தன் தாயை தூண்டிவிட்டு பிறகு அவள் மேலயே பழிபோடும் நீயெல்லாம் ஒரு மனிதனா? என்று கேட்கத் தோன்றுகிறது அவர்களை நோக்கி. இப்ப யோசிங்க யார் பொருப்பு? என்று. இந்த விடயங்களை சம்மந்தப்பட்ட அந்த மணமகன் நினைத்தால் தடுக்கலாம். ஆனால் இன்று அதுசரி இவர்கள் எல்லாம் பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்ற ஜாதி போல.... என்னிடம் சீதனத்துக்கு வரைவிலக்கனம் கேட்டால் 'குடும்பம் எனும் நாடு செல்ல பெண்னுக்கு ஆண் விதிக்கும் ஆகாத வரி' அப்படின்னு சொல்லலாம். இதற்கு முழுப் பொருப்பெடுக்க வேண்டியவர்கள் ஆண்களே. உலகில் நாம் ஒரு விடயத்தை பற்றி யோசிப்போம். அந்த விடயத்தில் ஏதாவது நன்மையும் இருக்கலாம் தீமையும் இருக்கலாம். ஆனால் சில விடயங்களில் மட்டும் தீமை மட்டுமே இருக்கும் அப்படிப்பட்ட ஒரு விடயம் தான் இந்த சீதனம். சற்று யோசிப்போம் இந்த சீதனத்தால் ஏற்பட்ட நன்மை எது? கிடையாது. அதற்கு மாற்றமாக வெறும் பிரச்சினைகள் மட்டுமே உருவாக்கப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட ஒரு சமூகச் சீரழிவைத்தான் நாம் இன்னும் அனைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது தான் வெட்கப்பட வேண்டிய விடயம். நாம் எல்லாம் 6 அறிவுள்ள மனிதர்கள் என்று பெருமைப் படுகிறோம் ஆனால் நடப்பது 5 அறிவுள்ள மிருகங்களை விட கேவலமாக... சிந்தியுங்கள் (கொஞ்சம் over ரா போயிட்டனோ?). இளைஞர்களே, ஆண்களே சற்று சிந்தியுங்கள் நீங்கள் நினைத்தால் மாத்திரம் தான் தடுக்க முடியும். நான் சீதனம் வாங்குவதில்லை கொடுப்பதில்லை என்ற முடிவுடன் உங்கள் சொந்தங்களில் நடைபெரும் திருமணத்திலும் அவற்றை தடுக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆண்மைக்கு அழகு சேருங்கள். நடந்ததை விட்டுவிடுங்கள். இனி நடப்பதை மட்டும் பாருங்கள். நிச்சயமாக நீங்கள் துணிந்தால் இவற்றை தடுக்க முடியும். துணிவீர்கள் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்துக்கள் தான், வாழத்தி வரவேற்பதா? இல்லை தர்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார் நீங்கள்?????